சென்னை
தமிழகத்தின் இரு மொழிக் கொள்கை மற்ற மொழிகள் கற்றுக் கொள்வதைக் கட்டுப்படுத்தவில்லை என மூத்த பேராசிரியர் ஏ ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்து மாநிலங்களிலும் மாநில மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியைக் கற்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும் என அறிவித்துள்ளார்.
இதையொட்டி ஒரு சிலர் தமிழக மாணவர்கள் மற்ற மொழிகளைக் கற்க முடியாமல் கட்டுப்படுத்துவதாகப் புகார் எழுப்பி உள்ளனர். பிரபல கல்வியாளரும் மூத்த பேராசிரியருமான ஏ ராமசாமி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மாநில உயர்கல்வி குழுவின் துணைத் தலைவராகவும் பணி புரிந்துள்ளார். இவர் தனது மாணவப் பருவ காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
ராமசாமி செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில் அறிவிக்கபட்டுள்ள இருமொழி கொள்கை எந்த ஒரு மாணவரையும் மூன்றாம் மொழியைக் கற்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கவில்லை. மாணவர்கள் விரும்பினால் வேறு மொழிகள் கற்க எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்படுவதால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்விச் சுமை அதிகமாகிறது.
நான் பாண்டிச்சேரியின் சரித்திரம் என்னும் என்னுடைய புத்தகத்துக்குக் குறிப்புக்கள் தேடிய போது பாண்டிச்சேரி பிரஞ்சு ஆட்சியின் இருந்ததால் எனது பேராசிரியர் என்னைப் பிரஞ்சு மொழி கற்குமாறு யோசனை கூறினார். நானும் பிரஞ்சு கற்றுக் கொண்டேன். பல ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழில் தேர்வில் எழுதி அதன் பிறகு இந்தியைக் கற்றுக்கொண்டுள்ளனர். ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் அங்கு ரஷிய மொழி கல்வி என்பதால் அம்மொழியை கற்கின்றனர்.
லட்சக்கணக்கான மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இந்தி பிரசார சபாவிலும் இந்தி கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் தமிழ்நாட்டை விட்டு வெளியே பணி புரிகின்றனர்? எனவே இந்தி மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறுவது தவறாகும். தமிழகம் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இந்தி பிரதான மொழியாக இருப்பதால் அவர்களும் மூன்றாம் மொழியைக் கற்கத் தயங்குகின்றனர்.
திராவிட தலைவர்கள் என்றும் இந்தி கற்பதை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்தனர். திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை தமிழ் – இந்தி சுயபோதனை என்னும் புத்தகத்தை வாங்கி இருந்தார். ஆனால் இந்தி கற்பதால் தமக்குப் பயன் இல்லை என்னும் காரணத்தினால் அவர் அதை நிறுத்தி விட்டார். அவர் முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு தமிழக சட்டப்பேரவையில் இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றினார்.
அவர் அப்போதைய அமைச்சர் மாதவன் இல்லத்தில் சுமார் 60-70 மாணவர் பிரதிநிதிகளை 1968 ஆம் வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இரவு சந்தித்தார். இந்த சந்திப்பு விடியற்காலை 4 மணி வரை நீடித்தது. அப்போது இந்த முடிவை அண்ணாதுரை எடுத்தார். அத்துடன் அந்த மாணவர் பிரதிநிதிகளிடம் அவர் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வராது என உறுதி அளித்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.