சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று உயர் நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே தேர்தல் ஆணையமும் நிராகரித்த நிலையில், தமாகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆனால், தமாகா முதலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறி சைக்கிள் சின்னம் பெற்றது. ஆனால், தற்போது ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், சைக்கிள் சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.

இந்த சைக்கிள் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி,ஜிகே வாசன் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணையின்போது,  தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க இயலாது என்று கூறிய நீதி மன்றம்,  தமாகா கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக தமாகா அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.  அல்லது சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமாகா சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில்,  இரண்டு தொகுதிக ளில் போட்டியிடுவதாக சொல்லி சைக்கிள் சின்னம் பெற்றதாகவும், ஆனால் தற்போது ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் இரண்டு தொகுதிகள் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து, அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.