சென்னை
சென்னை தாம்பரத்தில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூர் பகுதியில் உள்ளது. இந்த இல்லத்துக்கு அருகில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை பா.ஜ.க.வினர் நட்டு வைத்தனர். அந்த பகுதி மக்கள் இந்த கொடி கம்பம் ஆபத்தான நிலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்த\னர்.
இப்புகாரின் பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அந்த கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜே.சி.பி. உடன் வந்த போது அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடிக் கம்பத்தை அகற்ற விடாமல் ஜே.சி.பி.யின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர், பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காவல்துறையினர் பாஜகவினரை குண்டுகட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். பிறகு அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக் கம்பத்தை காவல்துறையினர் அகற்றினர். அப்போது பாஜகவினர் மற்றும் காவலர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டது குறித்து தாம்பரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில்,
”மாநகராட்சியில் முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கொடிக் கம்பம் வைக்கப்பட்டிருந்ததாகவும், மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை உடைத்த காரணத்திற்காக பாஜகவினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு\ 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.