சென்னை

லாசேத்திரா அமைப்பு அடுத்து மிருதங்கம் வாசிப்பதைத் தடை செய்யுமா எனப் பாடகர் டி எம் கிருஷ்ணா கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரபல கர்நாடக இசைப்பாடகரான டி எம் கிருஷ்ணா பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் அவர் கலந்துக் கொண்டார். அத்துடன் அனைத்து தரப்பு மக்களையும் கர்நாடக இசை சென்றடையப் பல முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணா எழுதிய செபாஸ்ட்டியன் அண்ட் சன்ஸ் என்னும் ஆங்கில புத்தகத்தில் அவர் மிருதங்கம் குறித்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புத்தகம் கலாசேத்திரா அரங்கில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் இந்த புத்தகத்தில் அவர் பசுவைக் கொன்று அதன் தோலைக் கொண்டு தயாரிக்கப்படுவதாக எழுதி இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதையொட்டி கலாசேத்திரா அமைப்பு தங்கள் அரங்கில் இந்த புத்தகம் வெளியிடுவதை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.   இதையொட்டி டிஎம் கிருஷ்ணா செய்தியாளர்களிடம், ”பசுவைக் கொன்று அதன் தோஅலிக் கொண்டே மிருதங்கம் செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.  அதைக் கொல்லாமல் இந்த வாத்தியத்தைச் செய்ய முடியாது.

இந்த வாத்திய இசையை அனுபவிப்பவர்கள் இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர்.   நான் எழுதிய இந்த புத்தகம் மிருதம் செய்பவர்களின் வாழ்க்கையைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.  இந்த வாத்திய இசைக்குக் கிடைக்கும் பெருமை வாத்தியத்தை உருவாக்கியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது இந்த புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கலாசேத்திராவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?  கலாசேத்திரா மிருதங்கம் வாசிப்பதைத் தடை செய்யுமா?  உண்மையை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்?  இந்த புத்தகம் மிருதங்கத்தை உருவாக்கும் மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் மாடுகள் வெட்டுமிடத்துக்கு சென்று அந்த தோலைச் சுத்தம் செய்து இந்த வாத்தியத்தை உருவாக்குகின்றனர்.

அதற்காக அவர்கள் இந்த தோலில் ஒட்டியுள்ள சதை மற்றும் மாமிச துணுக்குகளை அசிங்கம் பாராமல் அகற்றுகின்றனர். அந்த தோலின் மூலம் வாத்தியத்தை உருவாக்குகின்றனர்.  இந்த வாத்தியம் ஆடு மற்றும் மாட்டுத் தோலைக் கொண்டு உருவாக்கப்படும் என்னும் உண்மையை யாராலும் மறுக்க முடியுமா? ” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.