அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்.
ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட இலிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு “அக்னீஸ்வர சுவாமி” என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் “சரண்யபுரீஸ்வரர்” என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்குபுறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது இலிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு இலிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்றவில்லை. இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் இலிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், “ஐயனே! என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்” என்றான். இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் இலிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு “கோணபிரான்” என்ற பெயர் ஏற்பட்டது.
அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். அப்பர் சுவாமிகளுக்குத் தனி சந்நிதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி, சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியில் இறைவன் அக்னீஸ்வரர். மற்றொரு சன்னதியின் இறைவன் “வர்த்மானேஸ்வரர்”. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.
அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி, அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கித் தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்குத் தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கிறாள். எனவே “சூலிகாம்பாள்” என்ற பெயர் வந்து பின்னர் “சூளிகாம்பாள்” ஆனாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.
நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நளச் சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும், இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி கேட்டது. இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு, அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு. அம்மனுக்கு, மாலையில், இராஜ ராஜேசுவரி கோலத்தில் வெள்ளை அணிவிப்பது பழக்கமாகும். அம்பாளின் அனுக்கிரகங்களை அவ்வப்போது கண்கூடாக பார்க்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம்.
பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர். அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர். பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
திருவிழா:
சித்திரை மாதம் – சதய நட்சத்திரத்தன்று – 10 நாட்கள் – அப்பர் பக்தோற்சவம் – இது இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். வைகாசி மாதம் – வைகாசி பூர்ணிமா – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் திருவிழா – அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும்.மாதாந்திர பிரதோச நாட்கள், தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பிரார்த்தனை:
இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை “வாஸ்துநாதர்” என்றும் அழைக்கின்றனர்.
இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்தாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது.
நேர்த்திக்கடன்:
திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். வெள்ளைப்புடவை வழிபாடு திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு புத்தாடை சாத்தலாம்