பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப் பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் “சுந்தர வரதராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.

பழைய கோயிலில் இருந்த மூலவர் தனிசன்னதியில் இருக்கிறார். விழாக்கள் மற்றும் பூஜையின்போது இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு மற்றும் இடதுகீழ் கையில் தண்டம் வைத்தபடி அருளுகிறார். இவரை வணங்கினால் கல்வியில் சிறந்து திகழலாம் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமியின் பீடத்தில் ஆஞ்சயேர் மண்டியிட்டு வணங்கியபடியும், மகரிஷிகள் தவம் செய்தபடியும் இருப்பது விசேஷம். மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.

கருடாழ்வார், பெருமாள் கோயில்களில் சுவாமி எதிரே வணங்கியபடிதான் இருப்பார். அரிதாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில தலங்களில் சுவாமியின் அருகில் இருக்கிறார். ஆனால் இக்கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியை வணங்கிய கோலத்தில் உள்ளார். சுந்தரவரதராஜரின் காலடியில் இவர் மண்டியிட்டு வணங்கியபடி இருக்க, சுவாமி அவருக்கு மேலே தன் வலது கையால் ஆசிர்வதித்தபடி இருப்பது வித்தியாசமாக உள்ளது. மற்றொரு கருடாழ்வார், மூலஸ்தானத்திற்கு எதிரே வணங்கியபடி இருக்கிறார்.

இவரது இறக்கைகள் இரண்டும் விரிந்து பறக்க தயாராகும் நிலையில் உள்ளார். இடக்காலை மடக்கி, வலதுகாலை குத்துக்காலாக வைத்து, பெருமாள் எப்போது அழைத்தாலும் அவரைச் சுமந்துசெல்ல தயாராக உள்ளார். இவர் பக்தர்களின் குறைகளை பரந்தாமனிடம் பரிந்துரைத்து நிவாரணம் செய்பவர் என கருதப்படுவதால், “பரிந்துரைக்கும் கருடாழ்வார்” என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மூலவர் அருகில் உள்ளனர். பிரதான தாயார் சுந்தரவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். சிவனுக்கு உகந்த வில்வமரமே இங்கு தலவிருட்சமாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு பெருமாளுக்கு பல யாகங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. யாகம் செய்த “யாகசாலை ஸ்தூபி” கோயில் அருகில் இருக்கிறது. “சதுர்வேதிமங்கலம்” என்பது இவ்வூரின் புராணப்பெயர்.

பிரகாரத்தில் வடக்கு நோக்கி, தனிச்சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவிமலையுடன், கிளம்பும் கோலத்தில்இருக்கிறார். ஆண்டாளுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. உற்சவமூர்த்தியுடன் இராமானுஜர், வேதாந்ததேசிகர் இருக்கின்றனர். இக்கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியை வணங்கிய கோலத்தில் உள்ளார்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ஆழ்வார் திருநட்சத்திர பூஜை, புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகத்தில் கருடசேவை.

கோரிக்கைகள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, தாயாருக்கு வஸ்திரம் சாத்தி, விசேஷ அர்ச்சனை செய்தும், திருப்பணிக்கு உதவி செய்தும் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.