சென்னை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளி நிஜாமுதின் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 4 ஏடிஎஎம்ங்கள் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தைக்கொண்டு, வெடித்து எடுத்து, கொள்ளையடித்துச் சென்றனர். மொத்தம் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600 கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தமிழக காவல்துறையினர்மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கொள்ளையை வடமாநில கொள்ளையர்கள் செய்திருக்கலாம் என கூறிய காவல்துறையினர், அதற்கான பல்வேறு தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அரியானாவைச் சேர்ந்த அரிப் என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீன் என்பவர் சென்னையில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அவர் பாதுகாப்பாக தங்கியிருந்த இடத்தில் கைருது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.