திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மகாதீபம் ஏற்றும் பொது பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சர் சேகர் பாபு திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும், பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம்,

”திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு வழக்கமாக 2,500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் பென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் 7 பேர் பலியானார்கள்.

இதனால், தீபத்திருவிழாவன்று பக்தர்கள் மலையேறுவதால் ஏற்படும் அபாயங்களை ஆய்வு செய்வதற்காகவும், மலையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் தொல்லியல் மற்றும் சுரங்கத்துறையினர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

அவர்கள் அளித்த அறிக்கையில், மலையின் மேற்பகுதியில் ஈரப்பதம் இருப்பதாகவும், பாறைகள் உருளும் அபாயம் இருப்பதாகவும், மண்சரிவு ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலும் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’

என்று விளக்கம் அளித்துள்ளார்.