கோயம்புத்தூர்: முகக் கவசத்தைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் தடுப்புக் கவச உடை தயாரிப்பிலும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோர் அணிவதற்கான கவச உடை தயாரிப்பில் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. திருப்பூரில் செயல்படும் ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்காக, 10 ஆயிரம் கவச உடைகளை உற்பத்தி செய்து வருகிறது.
ஈரப்பதம், நுண்ணுயிர் புகாத வகையிலான பிரத்யேகமான ‘நான் ஓவன்’ துணியில், தலை முதல் கால் வரை முழுமையாக மூடும் வகையில், இந்தக் கவச உடை தயாரிக்கப்படுகிறது. மேலும், காலில் அணிவதற்காக வைரஸ் தொற்று தடுப்பு காலணியும் (ஷூ) உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மோடி அரசின் தாக்குதல்களால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த திருப்பூரின் தொழில்துறைக்கு, இந்தக் கொரோனா வைரஸ் மூலமான புதிய ஆர்டர் ஒரு புதிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.