திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டை பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த 50 உரிமையாளர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலா 50000 ரூபாய் பணத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி எதிரிலுள்ள காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்பகுதியில், நெருக்கமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் இருந்தன.

காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீயானது 50 கடைகளுக்கு மேல் பரவியது. பனியன் கடைகள் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், மளமளவென பரவிய தீ, கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் சென்ற, திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 50 கடை உரிமையாளர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க‌.செல்வராஜ் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து தலா 50000 வீதம் 25 லட்சம் ரூபாயை வழங்கினார்.

மேலும் அதே இடத்தில் மீண்டும் கடை அமைத்து கொள்ள இடத்தின் உரிமையாளரிடம் பேசி தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார். இந்த தீ விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் மூலம் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாகவும் தெரிவித்தார்.