அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் அமைந்துள்ளது.
அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.
கோயிலின் முன்பே குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து, உள் கோபுரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர் சன்னதிகள் உள்ளன. திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோரும் உள்ளனர்.
அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது. வெளியே இடதுபுறத்தில் சூளிகாம்பாள் (கருந்தார்குழலி) சன்னதி உள்ளது. கோயில் வளாகத்தின் வெளியில் திருநாவுக்கரசர் மண்டபம் 1958-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதற்கான கல்வெட்டோடு உள்ளது. மண்டபத்தின் முன்பாக குளம் காணப்படுகிறது.
திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.
மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும்.
அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது.