வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வருவாய் கோட்டமும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்படுகிறது.
சுமார் 6,077 சதுர கி.மீ. பரப்பளவு உடைய வேலூர் மாவட்டம் தோல் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டங்கள் உள்ளன.
மேலும், வேலூர், காட்பாடி, ஆற்காடு, வாலாஜாபேட்டை, அரக்கோணம், நெமிலி, அணைக்கட்டு,குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய 13 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேலூர் மாவட்டத்தில் 39.36 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளன. பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இப்பகுதிகளில் இல்லை. எனவே, இப்பகுதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன.ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளும், குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி, லுங்கி தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.திருப்பத்தூர் பகுதியில் “ஏழைகளின் உதகை’ எனப்படும் ஏலகிரி மலை, ஜவ்வாது மலை ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. மேலும், ஆசியாவிலேயே புகழ்பெற்ற காவலூர் விண்வெளி நிலையமும், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியும் இப்பகுதியில்அமைந்துள்ளன.
எனவே, திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென அனைத்துத் தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறுஅரசியல் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலூருக்குச் செல்ல வேண்டுமானால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே, திருப்பத்தூரை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.நடப்பு அதிமுக ஆட்சியில், ஏலகிரி மாவட்டம் என்ற பெயரில் புதிய மாட்டம் அறிவிக்கப்பட இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்படவில்லை.
குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஆகியவற்றை இணைத்து திருப்பத்தூர் மாவட்டம் ஏற்படுத்த வேண்டுமென்பது கோரிக்கையாக உள்ளது.
திருப்பத்தூரை மாவட்டமாக அறிவிக்கும் அதேநேரத்தில், ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்பட வேண்டியதும் அவசியம்.
குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி ஆகிய ஊர்களுக்கு மையப் பகுதியில் ஆம்பூர் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
ஆம்பூர், தோல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. சென்னை, பெங்களூரு, கோவை மார்க்கத்தில் செல்லும் பல்வேறு ரயில்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்கின்றன.ஆம்பூர் மையப் பகுதியில் இருப்பதால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். எனவே, ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டத்தை அறிவிக்கலாம்.
இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை, விரைவில் அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
(தகவல் நன்றி: திருப்பத்தூர் மாவட்டம் – Tirupattur District)