திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கும். மேலும், பல லட்சம் டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு காண்போரை பிரமிக்க வைக்கும் வகையில் காணப்படும். மேலும், பிரம்மோற்சவ நாட்களில் தினந்தோறும் வீதிவலம் வரும் மலையப்பசுவாமி ஒவ்வொரு வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்த பிரமோற்சவ நாட்களில் தினசரி பல லட்சம் பேர் ஏழுமலையானை தரிசித்து ஆசி பெற்று செல்வர்.
இந்த ஆண்டு புரட்டாசி பிரமோற்சவம் குறித்து திருப்பதி தேவஸ்தான் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அக்டோபர் 5-ந்தேதி காலை சின்ன ஷேச வாகனம், இரவு அம்ச வாகனம்,
அக்டோபர் 6-ந் தேதி சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல் வாகனம்,
அக்டோபர் 7-ந் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது.
அக்டோபர் 8-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார். இரவு கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அக்டோபர் 9-ந் தேதி காலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்தில் உலா வருகிறார்.
அக்டோபர் 10-ந் தேதி சூரிய பிரபை வாகனமும், இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.
அக்டோபர் 11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
அக்டோபர் 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது. இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் பிரமோற்சவ விழா நாட்கள் நடைபெறும் நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.