சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை திருப்பதி-காட்பாடி பயணிகள் ரயில், பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக முடங்கிய ரயில் சேவை கடந்த சில மாதங்களாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதுதான் முழுமையான ரயில்சேவை தொடங்கி உள்ள நிலையில், கொரோனா 3வது அலை காரணமாக சில ரயில் சேவைகள் மட்டும் குறைக்கப்பட்டு உள்ளது. பெரியளவில் ஏதும் குறைக்கப்படவில்லை. ஞாயிறு முழு ஊரடங்கின் போது பேருந்துகள் ஒடாத நிலையிலும் மக்கள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர்.

இந்த சூழலில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.  அதன்படி,

இன்று முதல் திருப்பதி-காட்பாடி பயணிகள் சிறப்பு ரயில் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சேவை திருப்பதியில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும். மறு மார்க்கமாக காட்பாடி-திருப்பதி பயணிகள் சிறப்பு ரயில் வண்டி எண் 07662, காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் இன்று முதல் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் வண்டி எண் 17238, சென்ட்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்பட உள்ளது. பித்திரகுண்டா-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வண்டி எண்17237, பித்திரகுண்டாவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில்சேவையும் ஜனவரி 31 வரை ரத்து செய்யப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.