திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் முக்கிய  நிகழ்வான கருடசேவை நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.  எம்பெருமான் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.  லட்சக்கணக்கான மக்கள் கோவிந்தா கோஷம் விண்ணை முழங்க பெருமாளை  தரிசித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்  நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 5வது நாளான நேற்று  கருட சேவை நடைபெற்றது.  இதைக்காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

நேற்று மாலை கருட சேவை தொடங்கியது. தங்க கருட வாகனத்தில் தங்க, வைர, பச்சை,மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்ப சாமி முழு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் அணிவகுத்து ஊர்வலமாகச் சென்றன. கூம்பு வடிவ இசைக்கருவிகள், புல்லாங்குழல் உள்ளிட்ட மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கேரள செண்டை மேளம், ஐதராபாத் பாண்டு வாத்தியம் ஆகியவையும் இசைக்கப்பட்டன. பலர் சமகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடன், காளி உள்பட பல்வேறு சாமிகளின் உருவங்களை போன்று  வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றனர்.

மேலும், கோலாட்டம், பரத நாட்டியம், நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடந்தன.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த சம்பவ பவனியைக் கண்ட பக்தர்கள் கோவிந்தா, கிருஷ்ணா, ராமா, மாதவா, கேசவா என திருநாமங்களை கூறி தரிசனம் செய்தனர்.

கருடவாகன சேவையை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது பக்தர்களின்  நம்பிக்கை.

திருமலை கருடசேவையைப் போன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெருமாள் ஸ்தலங்களிலும் கருட சேவை விமரிசையாக நடைபெற்றது.

,