திருப்பதி தேவஸ்தான உண்டியல் வசூலாக வெளிநாடுகளில் இருந்து கடந்த ஓராண்டில் வந்துள்ள சுமார் 26 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாமல் தேவஸ்தானம் தவித்து வருகிறது.

வெளிநாட்டு நாணய ஒழுங்குமுறை சட்ட விதிகளை காரணம் காட்டி திருப்பதி தேவஸ்தான கணக்கை கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசு தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.

இதன் காரணமாக இந்திய ரூபாயில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா டாலர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து செலுத்தப்பட்ட திராம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்துள்ள யூரோ மதிப்பிலான பணத்தை திருப்பதி தேவஸ்தான வங்கிக் கணக்கில் வரவு வைக்க எஸ்.பி.ஐ. வங்கி மறுத்துள்ளது.

சுமார் 26 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பணம் வரவு வைக்கப்படாமல் இருப்பதால் அந்நிய செலாவணி இழப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்

“அதானி நிறுவனத்துக்கு ரூ. 20,000 கோடி பணம் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க வழியில்லாத பாஜக அரசு

வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் காணிக்கையாக அனுப்பிய பணத்தை திருப்பதி தேவஸ்தான கணக்கில் வரவு வைக்க தடை விதித்து அதற்கு கணக்கு கேட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.