மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய வகுப்பினர் அனைவரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

ஒட்டு மொத்த பிற்பட்ட வகுப்பினரையும் தொடர்ந்து இதுபோல் அவதூறாக பேசினால் ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஷிண்டே பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில மக்கள் மட்டுமன்றி இந்திய மக்கள் அனைவரும் சாவர்க்கரை தெய்வமாக போற்றிவருகின்றனர். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக ராகுல் காந்தி மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உயர்சாதி வர்த்தகர்கள் மற்றும் எண்ணெய் வணிகம் செய்யும் சமூகத்தினர் மோடி என்ற குடும்பப்பெயரை கொண்டுள்ளனர்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி சார்ந்த ‘தெளி’ எனப்படும் எண்ணெய் வணிகம் சார்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். நீரவ் மற்றும் லலித் மோடி ஆகியோர் உயர்வகுப்பைச் சேர்ந்த வர்த்தகர்கள்.

வங்கிகளில் மோசடியாக கடன் வாங்கி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற லலித் மற்றும் நீரவ் மோடி குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்து பிரதமர் மோடி குறித்து கூறியதாக திரித்துக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதனை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக பேசியதாக கூறியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.