திருப்பதி

யெஸ் வங்கியில் இருந்து திருப்பதி கோவில் பணம் எடுக்கப்பட்ட நிலையில் பூரி ஆலயப் பணம் சிக்கிக் கொண்டது.


தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், வங்கி இயக்குநர் குழுவின் செயல்பாடுகளைப்   பாரத ரிசர்வ் வங்கி ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.

ஒரு வாடிக்கையாளர் ரூ. 50 ஆயிரம் மட்டுமே திரும்ப எடுக்க முடியும்.

இதனால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ந்துள்ளனர்.

நிறைய கோயில்களின் பணமும் யெஸ் வங்கியில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒன்று- திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில்.

யெஸ் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ஆயிரத்து 300 கோடி ரூபாயைக் கடந்த அக்டோபர்  மாதம் கோயில் நிர்வாகம் எடுத்து விட்டது.

ஏழுமலையான் புண்ணியத்தால் பக்தர்கள் அளித்த பணம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ,ஒரு தரப்பு கொண்டாடிக்கொண்டிருக்க-   ஜெகநாதர் பணம் ‘ கோவிந்தா’’ வாகி விட்டதாகப் பக்தர்கள் புலம்புகின்றனர்.

ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் ஆலயத்துக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அந்த பணம் திரும்ப வருமா? எனப் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
‘’ அதிக வட்டி தருவதால் இவ்வளவு பெரிய தொகையைத் தனியார் வங்கியில் எப்படி டெபாசிட் செய்யலாம்?’’ எனக் கோயில் நிர்வாகத்தை வறுத்தெடுக்கிறார்கள் , ஜெகநாதரின் பக்தர்கள்.

ஏழுமலையான் பணம் பத்திரமாக மீண்டது குறித்து புதிய  தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான பணம் அரசு வங்கிகளில் மட்டுமில்லாது யெஸ் வங்கி உள்ளிட்ட  4 தனியார் வங்கிகளிலும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்தபோது, செய்த ஏற்பாடு அது.

கோயில் அறங்காவலர் குழு தலைவராக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஒய்.வி.சுப்பாரெட்டிக்கு, தனியார் வங்கிகளில் பணம் பத்திரமாக இருக்குமா? என்று சந்தேகம் ஏற்பட்டது.

ஏழுமலையான் கோயிலுக்குத்  தனியார் வங்கிகளில் உள்ள  கணக்குகளை , முடித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் யோசனை சொன்னார்.

அவரும் ஓ.கே.சொன்னதால் , யெஸ் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிக் கணக்குகள் ‘குளோஸ்’ செய்யப்பட்டன.

சுப்பாரெட்டியின் சமயோசிதம் , ஏழுமலையான் பணத்தைக் காப்பாற்றி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

[youtube-feed feed=1]