டில்லி

காங்கிரஸ் கட்சி வரும் 12 ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடைபயணம் செய்ய உள்ளது.


மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்காக நடத்திய போராட்டங்களில் தண்டி யாத்திரை மிக முக்கியமானது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 12-03-1930 ஆம் தேதி அவர் தண்டிக்குப் புறப்பட்டார்.

வழிநெடுக மக்களைச் சந்தித்து சுதந்திர வேட்கையை ஊட்டினார். ஏப்ரல் 6 ஆம் தேதி அந்த யாத்திரை தண்டியில் முடிந்தது.

தண்டி யாத்திரை நடந்து சுமார் 90  ஆண்டுகள் ஆகிறது.அதனை இளைய சமுதாயத்துக்கு நினைவு கூறும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘காந்தி சந்தேஷ் யாத்திரை’’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட முறையில் பாதயாத்திரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

காந்தி, தண்டி யாத்திரையை ஆரம்பித்த இடமான சபர்மதியில் வரும் 12 ஆம் தேதி ’’காந்தி சந்தேஷ் யாத்திரை’  தொடங்குகிறது.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி தண்டியில் யாத்திரை நிறைவு பெறுகிறது.மொத்தம் 27 நாட்கள் பயணம்.

பயண தூரம்- 386 கிலோ மீட்டர்.

அனைத்து மாநில காங்கிரசாரின் பங்களிப்பும் இந்த யாத்திரையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்,தங்கள் பிரதேச படை-பட்டாளத்துடன் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவு நாளின் போது( ஏப்ரல் 6) தண்டியில் மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.