திருப்பதி

கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோவில் ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

கீழ் திருப்பதி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தராஜ பெருமாள் கோவில் திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.   திருமலை வெங்கடாசலபதி கோவில் கடந்த திங்கள் முதல் திறக்கப்பட்ட போது இந்த கோவிலும் திறக்கப்பட்டது.

இத்துடன்  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் என அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன.   இந்த கோவில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன், வாட்ஸ்அப், தொலைப்பேசி தகவல் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவிந்தராஜர்  கோவிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.   அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதையொட்டி கோவில் நடை நேற்று காலை அடைக்கப்பட்டது.   இன்றும் சுத்திகரிப்பு பணி தொடர்வதால் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.