சென்னை: நெல்லை சென்னை இடையே இயக்கப்பட்டுவரும் வந்தே பாரத் அதிவேக ரயிலில் இன்றுமுதல் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1140 பேர் பயணிக்க முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த நடவடிக்கை தென்மாவட்ட மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

நாடு முழுவதும் வந்தே பாரத் எனப்படும் அதிவேக ரயில் போக்குவரத்து கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் வந்தேபாரத் விரைவு ரெயில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ந்தேதி அன்று டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் நாட்டின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு சேவைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில், திருநெல்வேலி மற்றும் சென்னைக்கு இடையே பகல் நேர வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தென் மாவட்டங்களை தலைநகர் சென்னையுடன் இணைக்கும் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமையுடன் இயங்கி வந்த இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் முதலில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், ரயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி மாதம் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இருந்தாலும் பயணிகள் கூட்டம் இருப்பதால், தற்போது மேலும் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, இன்றுமுதல் வந்தேபாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்னை சென்றது. கூடுதல் 4 பெட்டிகள் இணைக்கப்பட்ட தன் காரணமாக, 312க்கும் மேற்பட்ட கூடுதல் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு கிடைக்கும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,440 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் உள்ளன.
இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
ஏற்கனவே ஏழு மணி நேரத்தில் சென்னைக்கு சென்றடையும் இந்த ரயிலுக்கு தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயங்குவது தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.