சென்னை:
அண்ணாநகர் திருமங்கலம்- நேரு பூங்கா இடையேயான சுரங்க ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் முதல்கட்ட பணிகள் முடிவடைந்து, கோயம்பேடு முதல்- ஆலந்தூர் வரை போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர் அது விரிவாக்கம் செய்யப்பட்டு சின்னமலை விமான நிலையம் வரையிலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதையடுத்து 2-வது கட்டமாக பூமிக்கடியில் மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையில் சுரங்க ரெயில் பணிகள் முடிவடைந்து சோதனை ஒட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் 7.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுரங்க பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
தற்போது, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளார்.
அதையடுத்து, பயணிகள் போக்குவரத்துக்காக விரைவில் சுரங்க மெட்ரோ ரெயில் திறக்கப்பட உள்ளது. அநேகமாக ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் சேவை ஓட தொடங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்தால் விரைவில் மெட்ரோ ரெயில் ஓட்டம் தொடங்கப்படும்.
இந்த சுரங்க ரெயில், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர், செனாய் நகர், பச்சையப்பன் காலேஜ் வழியாக நேரு பூங்காவை அடைகிறது.
தற்போது ரெயில் நிலைய பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.