திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் தெய்வானை என்ற பெண் யானை சில நாட்களாக தோல் நோயினால் அவதிப்பட்டு வருகிறது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் யானைக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 25வயதுடைய தெய்வானைஎன்ற பெண் யானை உள்ளது. இந்த யானையானது, விழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவின்போது சுவாமிக்கு முன்பாக  கம்பீரமாக நடந்து செல்லும். இதைக்காணவே கண்கள் போதாது. அப்பேற்பட்ட தேய்வானை கடந்த சில மாதங்களாக தோல்நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறது.

தெய்வானையின் கால்களின் பாதத்தில்,  வெள்ளைநிற தடிப்பு உள்ளது. மேலும் உடலின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே வெண்படலம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் யானையானது, எப்போதும்போல நடைப்பயிற்சிக்கு செல்வதும், தனது அன்றாட பணிகளையும் செவ்வனே செய்து வருகிறது.

இந்த நிலையில், யானையின் தோல் நோய் சம்பந்தமாக மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து, அதற்கு வைத்தியம் அளித்து வருகின்றனர்,. கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலையில், கால்நடை டாக்டர்கள் கலைவாணன் (மதுரை), வினோத்குமார் (திருச்செந்தூர்), ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் உமாகாந்தன், திருச்செந்தூர் வனவர் சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தெய்வானையின் நோய் குறித்து ஆய்வு செய்ததுடன்,  யானை உடலில் தோல்நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் மாதிரிகளை சேகரித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ குழுவினர், தெய்வலானை யானைக்கு பக்தர்கள் யாரும் உணவு, பழங்கள் வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்ததுடன், யானைகளுக்கு  வழக்கமாக வரக்கூடிய தோல்நோய்தான் தெய்வானை யானைக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த தோல்நோய் மேலும் பரவாதவாறு யானை உடலில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த அறிக்கை கிடைத்த பின்னர் அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும். தற்போது தோல்நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், ”பக்தர்கள் வழங்கும் உணவுப்பொருட்களால் யானையின் உணவுப்பழக்கம் இயற்கைக்கு மாறாக அமைவதால் தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் நேரடியாக தெய்வானை யானைக்கு உணவு, பழங்களை வழங்க வேண்டாம். அவற்றை யானை பாகனிடம் வழங்குங்கள். அதனை பரிசோதித்து தேவையானதை யானைக்கு பாகன் வழங்குவார்.

தெய்வானை யானைக்கு ஏற்பட்ட தோல்நோய் பாதிப்பை முற்றிலும் குணமாக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.