தூத்துக்குடி:
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.