லக்னோ: இது பாஜக, சமாஜ்வாதிக்கு முத்தலாக் கூறும் நேரம், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக, சமாஜ்வாதிக்கு தலாக் கூறுங்கள் என வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொண்ட அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஒவைசி வலியுறுத்தினார்.
உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாளை 3வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. இதனால், அந்த இடங்களில் விறுவிறுப்பான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என 4 முனை போட்டிகள் உள்ள நிலையில், ஒவைசியின் கட்சி அங்குள்ள சிறிய மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து 100 இடங்களில் போட்டியிடுகிறது.
தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த ஓவைசி, பாஜகவை கடுமையாக விமர்சித்ததுடன், பாஜகவையும், சமாஜவாதியையும் மக்கள் தங்களிடம் இருந்து வெகுதூரம் நகா்த்தி வைக்க வேண்டும் என்று மக்களிடையேகூறினார். தற்போதைய முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், முதல்வராக ஆசைப்படும் அகிலேஷ் யாதவும் பிரிந்து சென்ற சகோதரா்கள் போன்றவா்கள். இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இருவரும் பேரரசா்கள் போல கருதி நடந்துகொள்கிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, முத்தலாக் குறித்து பேசியுள்ளார். அதனால், இந்த முறை பாஜகவுக்கும், சமாஜவாதிக்கும் சோ்த்து மக்கள் முத்தலாக் கூற வேண்டும். இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் அவா்களுடைய கதையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் உள்ள தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நன்மை விளையும்.
இவ்வாறு அவர் கூறினார்.