புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையில் உள்ளதால், காங்கிரஸ் தொடண்டர்கள் கட்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் தெரிவித்தார்.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்பட்ட ஜோதிர் ஆதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 18 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியுடனான பயணத்தை முடித்து கொண்டார். இதையடுத்தே அஜய் மக்கன் தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிந்தியா காங்கிரஸ் இருந்து விலகியதுடன், மத்திய பிரதேச சட்டப்பேரவை இருந்த, அவருக்கு நெருக்கமான 22 எம்எல்ஏ களையும் ராஜினாமா செய்ய வைத்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் ஹிந்தியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, காங்கிரஸ் ஒரு கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. சில சக்திகள் நாட்டையும் நாட்டை ஐக்கியமாக வைத்திருக்கும் கட்சியையும், பலவீனப்படுத்த முயற்சித்து வருகின்றன. காங்கிரஸின் சித்தாந்தத்தை பின்பற்றும் மக்கள், இந்த சோதனை காலங்களில் அதனுடன் நிற்பது அவர்களின் கடமையாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைமையின் கட்டளை ஏற்று, தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ்காரர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வது முக்கியம் என்றும், புதிதாக நியமிக்கப்பட்ட டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி மற்றும் அவரது குழுவை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டதாகவும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
“ஒருவர் கட்சியில் ஒரு பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் அதை கேட்க வேண்டிய நேரம் இது அல்ல; கட்சிக்காக நாங்கள் அனைத்தையும் தியாகம் செய்த நேரம் இது. காங்கிரஸின் சித்தாந்தம் தெளிவாக இருப்பதால் யாரும் அதை பலவீனப் படுத்த மாட்டோம்”என்று அவர் கூறினார்.
முன்னதாக, அபிஷேக் தத், சிவானி சோப்ரா, ஜெய்கிஷன், முடித் அகர்வால் மற்றும் அலி ஹசன் ஆகியோரை டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (டிபிசிசி) துணைத் தலைவர்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததற்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சுபாஷ் சோப்ரா பிப்ரவரி மாதம் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி வாய்ப்பை இழந்தது. 2015 ல் 9.7 சதவீதத்திலிருந்த அதன் வாக்குகளை, இந்த முறை 4.27 சதவீதமாகக் குறைத்தது