சென்னை:
ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை துவங்கியுள்ளது.
இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆலையில் புகையால் சுற்றுச்சூழல் கெடுவதாகவும், உடல் நல பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களது சமீபத்திய போராட்டம் நேற்றுடன் 48வது நாளை அடைந்தது. அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடியும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் இந்த போராட்டம் நடந்தது. தொடர்ந்து போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்துள்ளார்.