புதுடில்லி: இந்திய குடியரசுக் கட்சியின் (ஆர்.பி.ஐ) தலைவர் ராம்தாஸ் அதாவலே இன்று, தன் பலத்தை நிரூபிக்க பாஜவுக்கு அதிக கால அவகாசம் கிடைத்திருந்தால், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருக்க மாட்டார்கள், என்று கூறினார்.
“பலத்தை நிரூபிக்க உச்சநீதிமன்றம் 24 மணிநேர காலக்கெடுவை வழங்கவில்லை என்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் ராஜினாமா செய்திருக்க மாட்டார்கள். 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம்”,என்று மத்திய அமைச்சர் கூறினார்.
இந்திய குடியரசுக் கட்சி (RPI) என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) ஒரு அங்கமாகும்.
26ம் தேதியன்று மராட்டிய அரசியலில் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்த முன்னேற்றங்களால் அடுத்த நாள் பலப்பரீட்சைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஃபட்னாவிஸ் மற்றும் பவார் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகினர். அவர்கள் கடந்த 23ம் தேதி காலை முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி யிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கும் முன்பாக, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஃபட்நாவிஸ் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் தன்னிடம் இல்லை என்று அறிவித்தார்.
ஃபட்நாவிஸ் மற்றும் பவாரின் ராஜினாமா, சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணிக்கு உத்தவ் தாக்கரேவுடன் தலைமையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமைகோரலுக்கு வழிவகுத்தது.