புதுடெல்லி:

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.


இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தனித்தனியே ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஆதார் அடையாள எண் உருவாக்கப்பட்டது.

ஆதார் எண்ணை கேஸ் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மானியம் கிடைக்காது என்றார்கள்.

கேஸ் வைத்திருப்பவர்கள் உடனே இணைத்தனர். அதேபோல் தொலைபேசி சேவைகள், வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், வருமான வரி தாக்கலுக்கு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கடந்த ஆண்டு அறிவித்தது.

அதற்கான காலக் கெடுவையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை நீட்டித்தது.

இதனை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிலர் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். சிலர் தங்கள் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகக் கூறினர். எனினும் இது தொடர்பாக எவ்வித தடையையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை.

இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.