சென்னை
தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6 மணி வரை 15.23 லட்ச்ம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்ற வாரத்தைப் போல இன்று தமிழகம் எங்கும் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட முகாமான இன்று 20 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை நகரில் 1600 முகாம்கள் உள்ளன.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், “இன்று 2ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று மாலை 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி போடும் பணி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மேலும் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய அரசு போதுமான அளவு தடுப்பூசிகள் அளித்தால் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும்” எனக் கூறி உள்ளார்.