சென்னை: சென்னை-டெல்லி செல்லும் ஏசி ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில் போதிய தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக் கிடக்க இப்போது படிப்படியாக பொது போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 ஏசி ரயில்கள் பயணத்திற்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றன. வரும் வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் புறப்படும் 2 ரயில்களின் டிக்கெட்டுகளும் காத்திருப்பு பட்டியலில் உள்ளது.
ஆனால் சிறப்பு ரயில்களுக்கு காத்திருப்புக்கு அனுமதி கிடையாது. சம்பந்தப்பட்ட டிக்கெட்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த ரயிலில் ஒரு ஏசி பர்ஸ்ட் கிளாஸ் பெட்டி, 5 ஏசி 2 டயர், 11 ஏசி 3 டயர் கோச்சுகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் போதிய தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் டிக்கெட்கள் அளிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பரத்வாஜ் என்பவர் தமது அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்.
நான் டெல்லியில் பணியாற்றுகிறேன். வரும் வெள்ளிக்கிழமை புறப்படும் ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கிறேன். திங்கட்கிழமை மாலை டிக்கெட் முன்பதிவு செய்ய தொடர்ந்து போராடி இரவு 9.45 மணியளவில் தான் டிக்கெட் கிடைத்தது. எனது பணி நிமித்தமாக வேலைக்காக நான் டெல்லி சென்றே ஆக வேண்டும். எனவே எந்த சிரமம் என்றாலும் அதை ஏற்க துணிந்துவிட்டேன் என்றார்.
மதுரா டிராவல்ஸை சேர்ந்த ஸ்ரீஹரன் பாலன் என்பவர் கூறுகையில், ஏராளமானோர் டெல்லி செல்ல விரும்புகின்றனர். ஏனெனில் நீண்ட நாட்களாக பல இடங்களில் அவர்கள் சிக்கிக் கொண்டு இருக்கின்றனர். 2,000க்கும் மேற்பட்டோர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்கள் விமானங்கள், ரயில்களுக்காக காத்திருக்கின்றனர். சிலருக்கு அவசரமான வேலைகள் இருக்கின்றன என்றார்.
அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் சடகோபன் என்பவர் கூறுகையில், எப்படி இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பு அவசியம். அலுவலகங்களிலும், கடைகளிலும் ஏசி பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் ஏசி ரயில்கள் இயக்கப்படுவது அரசின் நிலைப்பாட்டிற்கு முரண்பாடாக உள்ளது. இது பொதுமக்களுக்கு வைரஸ் தொற்றை ஏற்படுத்தும்.
தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. கழிவறைகளையும் மக்கள் பகிர வேண்டி வரும். 2 அல்லது 4 மணி நேர பயணம் என்றால் பொறுத்துக் கொள்ளலாம். நீண்ட நேர பயணம் என்றால் மிகவும் கடினம் என்றார்.