பரோல்…  எப்படி இருக்கிறார் பேரறிவாளன்?: சொல்கிறார் தோழர் தியாகு

Must read

“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் விடப்பட்டார். ஒரு மாத விடுமுறையில் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 தியாகு

பேரறிவாளனுக்கு அரசு பலவித நிபந்தனைகளுடனேயே பரோல் அளித்திருக்கிறது. ஆகவே அவரை பலர் சந்தித்தாலும், ஊடகங்கள் அவரை அணுக முடியாத நிலை.

இந்த நிலையில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பேரறிவாளனை சந்தித்திருக்கிறார்.  அவரிடம் நாம் பேசியதில் இருந்து…

“பேரறிவாளன் பரோலில் வந்தவுடனேயே அவரை சந்தித்துவிட வேண்டுமென்று விரும்பினேன். கடந்த காலங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை அவரை சிறைக்குச் சென்று சந்தித்திருக்கிறேன். நிறைய உரையாடியிருக்கிறோம்.

பேரறிவாளன்.. அன்றும் – இன்றும்

அவர் சிறையில் இருந்தபோதும் வாரம் ஒருமுறை – சிறை அதிகாரிகளின் அனுமதியோடு – என்னிடம் அலைபேசுவார். சிறையிலிருந்து அவர் சமீபத்தில் பேசியபோது, எங்களது “ தமிழ்நாடு வாழ்நாள் சிறையாளர் மன்றம்” அமைப்பின் துவக்கம் மற்றும் நிகழ்வு குறித்து தெரிவித்தேன். இந்தக் கூட்டம் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. முன்னாள் ஐ.ஜி. தியாகராஜன், அரி பரந்தாமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். இது குறித்து நான் தெரிவித்த போது பேரறிவாளன் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார்.

பிறகு அவர் பரோலில் வந்தவுடன் சந்திக்க வேண்டும் என்று நினைத்து தவிர்க்க முடியாத காரணங்களினால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. பிறகு சில நாட்களுக்கு முன்.. கடந்த 20ம் தேதி, பேரறிவாளன் வீடு இருக்கும் சோலையார்பேட்டை  நோக்கி பயணமானேன். ((சோலையார்பேட்டை என்பதுதான் ஜோலார் பேட்டை என்று மருவிவிட்டது. அது குறித்து பிறகு வாய்ப்பு அமையும்போது எழுதுகிறேன்.)

இப்போது என்னுடன் என் மகள் சுதாகாந்தி, என் பெயரன், அமைப்புத் தோழர் ஜீவானந்தன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

அங்கு செல்லும்போது எனக்குள் பழைய நினைவுகள் புகுந்துகொண்டன.

நக்சல் போராளியாக, கல்லூரி படிப்பை துறந்து வீட்டைவிட்டு வெளியேறி, அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டேன். எனது பத்தொன்பதாம் வயதில், – 1970ம் ஆண்டு- சிறையில் அடைக்கப்பட்டேன்.

நான் சிறை சென்றது குறித்த கவலை எனக்கு இருந்ததில்லை. ஏனென்றால், எங்களுக்கென்று வழக்கறிஞர் வைத்து வாதாடக்கூடாது என்ற தீர்மானத்துடனே சிறை சென்றோம். தூக்குத்தண்டனையை எதிர்பார்த்தே சென்றோம்.

எங்களது நடவடிக்கையின் பயனாக சிறைத்தண்டனை கிடைத்தது என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது.

ஆனால் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பொய்யான குற்றச்சாட்டில் சிறைவாசம்.. அதுவும் நீண்டகாலம் என்பது எவ்வளவு கொடுமையானது..? அதைத்தானே அனுபவித்து வருகிறார் பேரறிவாளன்.

அற்புதம் அம்மாள்

நினைவலைகளினூடே பேரறிவாளன் இல்லம் வந்து சேர்ந்தேன். பேரறிவாளனை பார்க்க பலரும் ஆர்வத்துடன் இருப்பதை புரிந்துகொள்ள முடந்தது. ஓசூரில் இருந்து வேனில் வந்திருந்த தொழிலாளர்கள் இருபது பேர் காத்திருப்பதை பார்த்தேன்.

பேரறிவாளன் வீட்டின் அருகே வந்தபோதே, பேறரிவாளனின் பரோல் என்பது சுந்திர விடுப்பாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு  சீருடை அணிந்த ஏழெட்டு காவலர்கள் இருந்ததை காண முடிந்தது. இவர்களைத் தவிர கியூ பிரிவு காவலர்களும் சூழ்ந்திருப்பார்கள் என்பதை உணர முடிந்தது. இரவு பகலாக இவர்கள்  மாற்றி மாற்றி காவல் இருக்கிறார்கள் என்பதை பின்னால் அறிந்துகொண்டேன்.

சிறையில் பார்க்க அனுமதிப்பது போலவே, இங்கும் குறிப்பிட்ட நேரம் வைத்திருக்கிறார்கள். காலை 10 மணி முதல் மதியம் 12 வரை.. பிறகு 3 முதல் 5 மணி வரை என்று.

வீட்டு முகப்பில் இருந்த காவலர்களிடம், ஆதார் போன்ற நமது  அடையாள அட்டைகளை காண்பித்து அனுமதி பெற வேண்டும்.

சிறை போலவே கேமரா செல்போன் எல்லாம் வெளியிலேயே வைத்துவிட்டுப் போகச் சொல்கிறார்கள். ஆகவே ஊடகவியாலர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியுமே தவிர, நேர்காணல் எடுக்க முடியாது என்பதை உணர முடிந்தது. பேரறிவாளனுக்கும் அதில் நாட்டமில்லை என்பதையும் பின்னால் உணர்ந்தேன்.

காவலர்கள் காண்பித்த குறிப்பேட்டில் நம்மைப்பற்றி எழுதிவிட்டு வீட்டினுள் செல்லவேண்டும்.

சென்றோம்.

வீட்டினுள் பாய் போட்டு, பேரறிவாளன் அவரது இரு சகோதரிகள், அம்மா அற்புதம் அம்மாள் பேசிக்கொண்டிருந்தனர். பேரறிவாளனை பார்க்க வந்திருந்த சிலரும் இருந்தனர்.

அற்புதம் அம்மாள் கொஞ்சம் இளைத்திருந்தார். பூரிப்பில் பருமனாகிவிடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அற்புதம் அம்மாள், பூரிப்பில் இளைத்திருக்கிறார்.

பேரறிவாளனுடன் பேசினேன். அதே அமைதியான பேச்சு. இப்போது வீட்டிற்கு திரும்பும்போது, காவல் வாகனத்தில் இருந்த காவலர்கள், “வீடு அடையாளம் தெரியுமா” என்று கேட்டார்களாம். அதற்கு பேரறிவாளன், “நான் பிறந்து வளர்ந்த பகுதி. எனக்குத் தெரியாதா” என்றாராம் சிரித்தபடியே.

ஆனால் அவருக்கு தனது வீட்டையே அடையாளம் காண முடியவில்லையாம்.

“இந்த பகுதியே முழுதும் மாறிவிட்டது. என் வீட்டை கண்டுபிடிக்கவே என்னால் முடியவில்லை” என்று சிரித்தார் பேரறிவாளன். அவரது சிரிப்பில் இருந்த வேதனையை உணர முடிந்தது.

இதே போன்ற அனுபவம் எனக்கும் உண்டு என்பதைச் சொன்னேன்.

நான் பரோலில் வந்தபோதும், காவலர்கள், “வீடு தெரியுமா” என்று கேட்க… நானும், “தெரியாமலா இருக்கும்” என்றேன். ஆனால் அந்த பகுதியே மாறியிருந்தது.. நான் பிறந்து வளர்ந்த பகுதியை வீட்டை எனக்கே அடையாளம் தெரியவில்லை.

இதைச் சொன்னதும் பேரறிவாளனும் ரசித்துச் சிரித்தார். சோக ரசம் என்பது இதுதான்.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மனதிடம் உள்ளவர். கொள்கை உறுதி உள்ளவர். சிறந்த அமைப்பாளர்.  ஜோலார்பேட்டை பகுதியில் பகுத்தறிவு இளைஞர்களிடம் செல்வாக்கு மிக்கவர். பண்பாளர். எல்லோருக்கும் உதவக்கூடியவர். அங்கு   பிரியமும் மரியாதையும் அனைவருக்கும் உண்டு.

நிறைய படிப்பவர் குயில்தாசன். அவரது வீடு முழுதும் புத்தகங்களால் நிறைந்திருக்கும். தான் படிப்பதோடு, தனது சுற்றமும் உறவுகளும் படித்துத் தெளிய வேண்டும் என்ற கொள்கை உடையவர் குயில்தாசன். அனைவரையும் அழைத்து நல்ல நூல்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்.

குயில்தாசன்

அதே குணம்தான் பேரறிவாளனுக்கும். ஆம்.. தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் புத்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொல்லும் அப்பாவின் குணம் அப்படியே பேரறிவாளனுக்கும் வாய்த்துவிட்டது.

இது குறித்து பேரறிவாளன், “இப்போது நான் பரோலில் வந்ததும் பலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் சிலர், “அறிவு.. நீ கொடுத்த புத்தகங்களை படிச்சு முடிச்சிட்டோம்” என்று சொன்னபோது பலவித உணர்வு எனக்குள்” என்றார் பேரறிவாளன்.

நீண்டநாள் சிறைவாசிகளுக்கு பரோல் என்பது முக்கியமான விசயம். நான் சிறையில் இருந்தபோது பரோல் விடுப்பில் வந்து அப்படியே விடுதலையும் கிடைத்தது.

அப்போது என்னுடன் சிறையில் இருந்த சக தோழர் லெனினை சந்தித்தார் அப்போதைய சிறைத்துறை அமைச்சர் பொன்னையன். அப்போது அவர், “உங்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைத்துவிடும். விடுதலைக்கான கோப்பில் நான் கையெழுத்திட முடியாது. முதல்வர் எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்து கோப்பில் கையெழுத்திட்டதும் விடுதலை கிடைத்துவிடும்” என்றார். அதற்கு லெனின், “எப்படியும் விடுதலை கிடைத்துவிடும் என்கிறீர்கள். அப்படியானால் பரோலில் விடலாமே” என்று கேட்க.. அதன்படியே பரோல் கிடைத்து. எம்.ஜி.ஆர். திரும்பியதும் கோப்பில் கையெழுத்திட.. விடுதலையும் கிடைத்தது.

இதையெல்லாம் பேரறிவாளனுடன் பகிர்ந்துகொண்டேன்.

அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று என் மகளும், பேரக்குழந்தையும் விரும்பினார்கள். ஆனால் நான் முன்பே சொன்னது போல, அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அந்த ஆசை நிராசையானது.

பிறகு மாடியில் இருக்கும் குயில்தாசனை சென்று சந்தித்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மிகுந்த உடல் நலவுற்ற நிலையில் இருந்தவர். இடையில் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும் மறுத்துவந்தவர். தற்போது, மகன் பேரறிவாளன் வந்தபிறகு, சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்.

முன்பைவிட தற்போது நன்கு உடல் நலம் தேறியிப்பதை உணர முடிந்தது. “நல்ல செய்தி வரும். விரைவில் பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்றால் ஆவல் மிகுந்த மெலிந்த குரலில்.

ஒரு அப்பாவின் இயல்பான ஆசை.

கேட்கும் போது நெகிழ்வாக இருந்தது.

“நிச்சயம் நடக்கும்” என்று சொல்லிவிட்டு,  அவரிடம் விடைபெற்று கீழே வந்தேன்.

மீண்டும் சிறிது நேரம், பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் பேசினேன். பேரறிவாளன் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் என்றாலும் சில சிறு சிகிச்சைகள் தொடர்கின்றன.

பரோல் குறித்தும் பேசினோம்.

பரலோலில் என்பது நல்லதொரு அறிகுறி. சிறைவாசியை விடுதலை செய்வதில் சிலர் காட்டும் எதிர்ப்பின் வீரியத்தைக் குறைக்கும். அவரை அனைவரும் போய் பார்க்கிறார்கள். அவரை ஏற்றுக்கொள்வதற்கான வீடு, ஊர்,  ஒரு சமூகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் அறிவிக்கும் விசயம் இது.

சம்பந்தப்பட்டவரும், இந்த சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் தகுதியானவர் என்பதை அனவைருக்கும் உணர வைக்கும் விசயம் இது.

தற்போது பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியே விடுதலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

“நல்லதே நடக்கும்” என்று கூறி பேரறிவாளனிடமிருந்து விடைபெற்றேன்.

அவரும் விடைகொடுத்தார்.. கண்களில் நம்பிக்கையுடன்!”

More articles

Latest article