சென்னை: அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில், தனது நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்காத ரஜினியை,  ‘வா தலைவா வா’ என அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பு விடுத்தும் வரும் நிலையில்,  ரஜினியின் அரசியல் குறித்து துக்ளக் அட்டைப்படம் மூலம் அதன் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பும்  ‘கழுதைகளுக்கு உணவாகும் வேஸ்ட் பேப்பரை போன்றது’ என்பதை கார்டூன் மூலம் விவரித்து உள்ளார். இதனால், ரஜினி அரசியலுக்கு வருவது கேள்விக்குறியதாகவும், கேலிக்குறியதாகவும் மாறி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு வார இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பிலும், ரஜினி அரசியலுக்கு சரிபட்டு வர மாட்டார் என்று பொதுமக்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்த கருத்தை மீண்டும் ஊர்ஜிதப்படுத்துவது போல துக்ளக் வார இதழின் அட்டைப்படமும் தெரிவித்துள்ளது.

தமிழ்சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் ரஜினி,  கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் டிசம்பர் 31ந்தேதி அன்று, தனது ரசிகர் மன்றத்தினருடன் கலந்துரையாடினார்.  முன்னதாக தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கொளுத்தி போட்டார். பின்னர் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி, தானும் அரசியலுக்கு வருவதாக கூறினார்.

அப்போது,  ரசிகர்களிடம், முதலில் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான் என்று கூறியவர்,  தான் அரசியலுக்கு வருவேன் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், அவரது அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசியல் கட்சிக்காக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தொடர்ந்து படங்களில் நடித்து, கல்லா கட்டுவதிலேயே கவனமாக இருந்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த ஆண்டும் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போதும்,   2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவேன் என்று கூறினார். ஆனால், இதுவரை அரசியல் கட்சி குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு  ரஜினி அரசியல் தொடர்பாக தனியார் பத்திரிகை  ஒன்று பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில்,   ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகமே என்று 90 சதவிகிதம் பேர் கருத்துக்கள் தெரிவித்து உள்ளனர்.  ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 4 சதவிகிதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 6 சதவிகிதம் பேர், அதுக்கு அவர் சரிபடமாட்டார் (அரசியலுக்கு வரமாட்டார்)  என்று ஆணித்தரமாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 12ந்தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியல் கட்சி தொடங்குவது குறித்து 3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறியவர் தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சி தொண்டர்களுக்கு  வேலை, 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை, ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என தெரிவித்ததுடன்,   கட்சியின் கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்த வேண்டும். அனைத்துத் துறையிலும் அனுபவம் உள்ளவர்களை வைத்து ஒரு குழு அமைத்து. அந்தக்குழு சொல்வதை ஆட்சித் தலைமை செயல்படுத்த வேண்டும். இது எனது திட்டம் என்று தெரிவித்தார்.  அதோடு அவரது அரசியல் நடவடிக்கையும்  முடங்கிப் போனது.

இந்த நிலையில், தற்போது, ரஜினியின் அரசியல் குறித்து கடந்த ஆண்டு நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்பை உறுதிப்படுத்துவதுபோலவே அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  இந்த நிலையில்தான் கடந்த வாரம்,  ரஜினி வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு நாட்களுக்கு பிறகு, இந்த செய்தி குறித்து ரஜினி விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டிருந்தார். அதில்,  என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறியுள்ளார். என கூறி, தான் ஒரு குழப்பவாதி என்பதை என்தை மீண்டும் நிரூபித்தார்.

ரஜினியின் இந்த விளக்கம்,  அவரது படையப்பான படத்தின் காமெடிபோல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது  என்பதுபோல இருப்பதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வந்தனர்.

நடிகை கஸ்தூரியும் அவரது பங்குக்கு ரஜினியின் அரசியல் குறித்து நக்கல் செய்திருந்தார். அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கும் நடிகர் ரஜினியையும், அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறிக்கொண்டு,  கட்சியை  நடத்தி வரும் நடிகர் கமல், அரசியலை பகுதிநேர தொழிலாக வைத்துக்கண்டு, சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இருவரையும் சேர்த்து நடிகை கஸ்தூரி செமையாக கலாய்த்துள்ளார்.

இதற்கிடையில், ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ‘வா தலைவா வா’ என்று போஸ்டர் ஒட்டி அவரை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து வருகின்றனர். இப்போ வரலைன்னா எப்போதும் இல்லை என்பது உள்பட பல்வேறு பஞ்ச் டயலாக் போஸ்டர்களை அடித்து ஒட்டி, ரஜினியை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், ரஜினியோ அரசியல் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார்.

அதேவேளையில் ரஜினியின் டிவிட் தொடர்பாக தமிழருவி மணியன் உள்பட பலர்  ரஜினியை  சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வந்தன.  தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், பாஜக தலைவர் அமித்ஷா சார்பாக ரஜினியை சந்தித்து பேசினார். சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த பேச்சு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. ஆனால், குருமூர்த்தி, தனது துக்ளக் பத்திரிகையின் அட்டைப்படத்தில், அழகான கார்டூன் மூலம் ரஜினியின் அரசியலை கிண்டலடித்துள்ளார்.

இந்த நிலையில்தான் இந்தவாரம்  துக்ளக் வார இதழின் அட்டைப்படத்தில் குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் அறிவிப்பும்  ‘கழுதைகளுக்கு உணவாகும் வேஸ்ட் பேப்பரை போன்றது’ என்பதை கார்டூன் மூலம் விவரித்து உள்ளார். இதனால், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது தெளிவாகி உள்ளது. இது  ரஜினி ரசிகர்களிடையே மேலும் அதிர்ச்சயை ஏற்படுத்தி வருகிறது.

‘நடிகர்கள் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வருவர்களில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும் ஒருவர்.  அவர் ஏற்கனவே  ரஜினி அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது,   ரஜினி படிப்பறிவில்லாதவர் என்றும், ரஜினியிடம்  கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. தமிழக மக்கள் புத்திசாலிகள், ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் மாறாது  என்று கூறியிருந்தார்.

தற்போது சுப்பிரமணிய சாமியின் வார்த்தைகளை ஆமோதிப்பதுபோலவே ரஜினியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.  2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக  சட்டமன்ற தேர்தலில் ரஜினி களமிறங்கி, தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்புவார் என  எதிர்பார்த்த நிலையில், தன் உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்காமல் நழுவி விடும் நடவடிக்கையில் ரஜினி ஈடுபட்டு வருவது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோல, அவர் அதுக்கு (அரசியலுக்கு) சரிபட மாட்டார் என்பதே உண்மை.