சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 04.02.2023 முதல் 17.02.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,09,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையை அழகுபடுத்த பலகோடி ரூபாய்களை தமிழ்நாடு அரசு செலவழித்து வருகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக, பொதுமக்கள், பொதுஇடங்களிலும் சாலையோரங்களிலும் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுசுவர் மறறும் தெரு பெயர் பலகைகளிலும் சுவெராட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, எச்சரிக்கையை மீறி பொதுஇடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மற்றும் சுவரொட்டி ஒட்டியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சி சாா்பில் மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க ‘சிங்கார சென்னை 2.0’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்படி, பொது, தனியாா் இடங்களில் குப்பைகள், கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விதியை மீறி வரையப்பட்டுள்ள சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த விடங்களில் நமது கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ரூ.18,28,790 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில், பொதுமக்கள் குப்பைகள், கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிா்த்து சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் .

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.