டில்லி:
முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இனி முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்தால் மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டும்.
இஸ்லாமியர்களில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு அளித்தது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரை செய்தது. . இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது.
இதில் சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்ற சட்ட மசோதா, இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இச் சட்டத்துக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
முத்தலாக் மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே மஜ்லிஸ்-இ-இத்தாகதுல் முஸ்லிமீன் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஏ.ஐ.எம்.ஜாம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஒவைசியும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக எம்.பி. அன்வர்ராஜாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
முத்தலாக் சட்ட மசோதா குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கிடையே முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. முன்னதாக முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சட்டம் அமலுக்கு வந்தால் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.