பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன்மூலம், நேருவுக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக மூன்று முறை மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 1964ம் ஆண்டு அவரது மறைவு வரை 16 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நீண்டகாலம் ஆட்சியில் இருந்து இந்தியாவை வழிநடத்திய பெருமைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி தவிர 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 7:15 மணிக்கு தொடங்கி சுமார் 2:30 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 36 இணையமைச்சர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கூட்டணி கட்சியினருக்கு 5 கேபினட், 2 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) மற்றும் 4 இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் ஒரு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மோடி அமைச்சரவையில் தமிழர்கள் 3 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், குஜராத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ஜெய்சங்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல். முருகன் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதில் நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் இருவருக்கும் கேபினட் அந்தஸ்தும் எல். முருகனுக்கு இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.