சென்னை: நீர் நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கொட்டப்படும் கட்டுமான கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைந்து வருவதுடன், சில காலங்களில் அவை தரிசு நிலங்களாகவும் மாறி வருகின்றன. இதை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி கண்காணிப்பு குழு அமைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3 ரோந்து வாகனங்கள் கணிகாணிப்பு பணியில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் விதிகளை மீறி ஆங்காங்கே கட்டுமான இடிபாட்டு கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும் கட்டுமான கழிவுகளை நீர்நிலைகளிலும், நீர் வழித்தடங்களிலும் கொட்டுகின்றனர். இந்தக் கட்டுமான கழிவுகள் மழைநீர் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்தி, வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களிலும் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழைநீர் எளிதாக செல்ல முடியாமல் தடை ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இந்தக் கட்டுமான கழிவுகள் ஆங்காங்கே கொட்டிக் கிடப்பதால், நகரின் ஒழுக்கமும் பொலிவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கட்டுமானக் கழிவுகளை கொட்ட வேண்டும். விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும், விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை கொட்டினால், அது தொடர்பாக 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி புகார் எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவ்வாறு கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், விதிகளை மீறி அடிக்கடி கட்டுமானக் கழிவுகளை கொட்டும் இடங்களை கண்காணித்து, நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும் 3 கண்காணிப்பு குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க 3 ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.