டில்லி
வடக்கு டில்லியின் முகர்ஜி நகர் சிண்டிகேட் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் வெறும் ரூ. 5 மற்றும் ரூ, 10 நாணயங்களாக ரூ.2.3லட்சம் கொள்ளையடித்துள்ளனர்.
பணமதிப்பு குறைப்பின் போது புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் அவைகளை எங்கு ஒளித்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என ஒரு வதந்தி உலவியது. அதை பலரும் நம்பி விட்டனர். அப்படி நம்பியவர்களில் மூவர் டில்லி முகர்ஜி நகர் பஸ் டிப்போ அருகே வசித்து வருகின்றனர்.
அவர்கள் மூவரும் ஒரு திரைப்படத்தை பார்த்து அதில் கண்டுள்ளபடி, சிண்டிகேட் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்றனர். ஊழியர்கள் அனைவரும் வங்கியை விட்டு சென்ற பிறகு ஜன்னல் கிரில்லை உடைத்து வங்கியுனுள் புகுந்தனர். ஆனால் ரூபாய் நோட்டுகளை கொள்ளை அடிக்க பயந்தனர். அதில் உள்ள மைக்ரோ சிப் மூலம் சாட்டிலைட் தங்களின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்துவிடும் என எண்ணிய கொள்ளையர்கள் அங்கிருந்த 46 பாலிதீன் பைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 மற்றும் ரூ. 10 நாணயங்களை கொள்ளை அடித்துச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ. 2.3 லட்சம் ஆகும்
காலையில் ஜன்னல் க்ரில் கம்பிகள் உடைந்திருப்பதை கண்ட வங்கி ஊழியர் ஒருவர் போலீசுக்கு புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் மூன்று கொள்ளையர்களும் பிடிபட்டனர். அப்போது மேற்கூறிய தகவலை அவர்கள் கூறினார்கள். மேலும் கொள்ளை அடித்த பணத்தை அவர்கள் குடியிலும், உணவிலும் முழுமையாக செலவழித்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு மூவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.