டெல்லியில் ஏ.டி.எம். பணம நிரப்பும் வாகனத்தில் ரூ. 9.5 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது

Must read

டெல்லி:
டெல்லியில் ஏ.டி.எம். வாகனத்தில் இருந்து துப்பாக்கி முனையில் ரூ. 9.5 லட்சம் கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் 19ம் தேதி டெல்லி பாண்டவ் நகரில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப சென்ற வாகனத்தை வழிமறித்து, அவர்களிடம் இருந்து ரூ. 9.5 லட்சத்தை 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றது. இந்த 3 பேரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், டெல்லி மின்சார வாரிய அதிகாரி ஒருவருக்கு டிரைவராக பணிபுரிந்த பிட்டோ (29) என்பவர் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. ஏ.டி.எம். இயந்திரங்களில் நிரப்ப பணம் கொண்டு செல்லும் வாகனங்களை இவர் பின் தொடர்ந்துள்ளார். பின்னர் தனி நபராக கொள்ளையடிக்க முடியாது என்று எண்ணி ரோகித் நகரை சேர்ந்த ரோகித் நாகர் (19), சன்ன சர்மா (22) ஆகியோரையும் தனது திட்டத்துக்கு சேர்த்துக் கொண்டார்.
இவர்கள் ஒரு திருட்டு பைக்கில், ஒரு ஏடிஎம்.க்கு பணம் நிரப்ப சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து, அது நிறுத்தப்படும் இடம், அதில் உள்ள பணியாளர்களின் நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கண்காணித்து வந்தனர். எந்த இடத்தில், எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். பின்னர் ஒரு நாட்டு துப்பாக்கியுடன் கடந்த 19ம் தேதி ஒரு பணம் இருந்த வேனை சகார்பூர், லெட்சுமி நகர், நிர்மன் விஹார் ஆகிய இடங்களில் மடக்கி கொள்ளைடிக்க நினைத்தனர்.
ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளையடிக்காமல் பொறுமையாக இருந்தனர். பின்னர் பத்பர்கஞ் பகுதியில் குறைந்த அளவு நடமாட்டம் இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வேனை மறித்தனர். துப்பாக்கியை டிரைவர் தலையில் வைத்து மிரட்டி, பணியாளர்கள் கையில் வைத்திருந்த பணப் பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பியோடிவிட்டனர்.
போலீஸை ஏமாற்றுவதற்காக ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்களில் மாறி மாறி சென்று பல இடங்களில் இருந்துள்ளனர். பின்னர் வீட்டில் டிவி பார்த்தபோது புதிய ரூபாய் நோட்டுக்களில் ஜிபிஎஸ் சிப் இருப்பதாக செய்திகள் வெளியானதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் அந்த பணத்தை செலவு செய்ய அஞ்சி வீட்டிலேயே வைத்துவிட்டனர். பின்னர் 3 பேரும் ஒரு திருட்டு காரில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டனர். அவர்களிடம் இருந்து பணத்தையும், துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More articles

Latest article