தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், ஒகேனக்கல் பகுதியில் காவிரியில் குளித்த சேலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன். இவர் பேலஸ் தியேட்டர் அருகே டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று, ஞாயிறு விடுமுறையை சந்தோசமாக கழிக்கும் நோக்கில், ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஒகேனக்கல் அடுத்த ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் குடும்பத்தினர் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ரியாஸ்சுதீனின் மனைவி அபிதா (38), மற்றும் அவரது குழந்தைகள் பாத்திமா (14) மற்றும் முகமது ரபாஸ் (9) ஆகியார் , காவிரியில் நீரில் மூழ்கி மாயமாகினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரியாசுதீன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டதுடன், தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேர தேடலுக்கு பின், காவிரி ஆறு பாயும், நாடார்கொட்டாய் பகுதியில் அபிதாவின் உடலை மீட்டனர். மற்ற இருவரின் உடல்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காவிரியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.