புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் மத்திய அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த இரு வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்.
மத்திய அரசு அதன் புதிய கல்விக் கொள்கையில் “உறுதியாக” உள்ளது, அதற்காக “… சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
மத்திய கல்வி அமைச்சரின் கருத்து “பிளாக் மெயில்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தார், மேலும் நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் மாணவர்கள் மற்றும் பள்ளிகள் மீது ஏற்படும் பாதகமான தாக்கத்தையும் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில் தற்போது மாநில அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ‘தெலுங்கு கட்டாயம்’ என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை ஒரு பாடமாக கற்பிப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயமாக்கிய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
2025-26 கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து வாரியப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை ஒரு பாடமாகக் கற்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தெலுங்கு மொழித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தெலுங்கு மொழியைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் தகுந்த மேற்பார்வையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்பிப்பதற்கும், அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதற்கும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ‘வெண்ணெலா’ என்ற தெலுங்கு பாடப் புத்தகம் பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துமாறு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் ஐபி வாரியங்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘சுந்தர தெலுங்கு’ (‘standard Telugu’) மற்றும் ‘எளிய தெலுங்கு’ (‘simple Telugu’) என இரண்டு பாடப்புத்தகங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
தெலுங்கு தாய்மொழி இல்லாத மாணவர்களுக்கு ‘எளிய தெலுங்கு’ பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025/26 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் தொடங்கி 2026/27 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் கட்டாய தெலுங்கு பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கை 8 ஆம் வகுப்பு வரை அமலில் இருப்பதால், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுடன் தெலுங்கும் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதுடன் வெளி மாநில மாணவர்கள் பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்வதையும் இது உறுதி செய்கிறது.
அதேவேளையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில், இரண்டு மொழிப் பாடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று ஆங்கிலம். மற்றொன்று இந்தி அல்லது வேறு மொழி என்று உள்ளது.
தெலுங்கு கட்டாயம் என்ற தெலுங்கானா அரசின் இந்த புதிய உத்தரவால் இனி, இரண்டாம் மொழியாகத் தெலுங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் CBSE பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கை கட்டாய மொழியாக்கும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.