சென்னை: ஆகஸ்டு 14 நள்ளிரவில் 75-வது சுதந்திர தினம் – சட்டசபையின் நூற்றாண்டு விழா – ஸ்டாலின் பதவி ஏற்று 100வது நாள் விழா ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, சிறப்பான முறையில் கொண்டாட தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் சட்டசபையின் நூற்றாண்டு விழா தொடங்கியதை சிறப்பிக்கும் வகையில், ஆகஸ்டு 14ந்தேதி நள்ளிரவில் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு விழா கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சட்டமன்ற வளாகத்தில் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15ந்தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகஅரசும், 75வது ஆண்டு வைர விழாவை நினைவுகூறும் வகையில், சென்னை கடற்கரை சாலையில், பிரமாண்ட நினைவுச்சின்னம் அமைக்க உள்ளது. அதற்கான டெண்டரும் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றும் 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையொட்டி, சட்டமன்றத்தின் 100வது ஆண்டு விழா, நாட்டின் 75வது சுதந்திர தின விழா, திமுக அரசின் 100வது நாள் ஆகியவற்றை சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாட தமிழகஅரசு தீர்மானித்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற திமுக, மே மாதம் 7ந்தேதி ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதுடன், அமைச்சரவையும் பதவி ஏற்று, பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி வருகிறது. திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் , மாநிலமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை முன்னிட்டு, தமிழக சட்டசபையில் வருகிற 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு விழாவை நடத்த அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் அழைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 1972ஆம் ஆண்டு இந்தியாவின் 25-வது சுதந்திர தினத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கொண்டாட ஆணை பிறப்பித்தார். அதே போல, 1987ஆம் ஆண்டிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும், அதை பின்பற்றி கொண்டாட முடிவு செய்துள்ளது.