மயிலாடுதுறை: அதிகாரிகளின் அலட்சியத்தால் மயிலாடுதுறை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இது அரசுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விளையும் நெல்மூட்டைகள், அங்குள்ள பெரம்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட சுமார் ஐந்தாயிரம் நெல் மூட்டைகளில் சில ஆயிர மூட்டைகள் மட்டுமே கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேலும் மூன்றாயிரம் நெல்மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டடிருந்தது.
இந்த நெல்மூட்டைகள் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், நனைந்து சேதமடைந்து முளைக்கத் தொடங்கி உள்ளன. மழை பெய்வது குறித்து அறிந்தும் அதிகாரிகள், அதை பாதுகாக்க எந்தவித நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், குறைந்த பட்சம் தார்ப்பாய்களை வாங்கி அதைக்கொண்டு மூடி வைத்தாவது நெல்மூட்டைகளை பாதுகாத்திருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சியை எடுக்காதால், அனைத்து நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தனத்தால், அரசுக்கு தேவையற்ற இழப்பபு என்று கூறியுள்ள விவசாயிகள், இதற்கான நஷ்ட ஈட்டை, அதற்குரிய அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.