கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.
பிப்ரவரி முதல், மே மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேர் வெள்ளியங்கிரி வந்த நிலையில் இந்த ஆண்டு 3 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இதுவரை 40,000 பேர் வந்து சென்றுள்ளனர்.
மேலும், மார்ச் 8ம் தேதி மகாசிவராத்திரி வருவதை ஒட்டி வெள்ளியங்கிரி மலையேற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்துள்ளனர்.
ஏழு மலைகளை அடக்கிய தொடரான வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையான கிரி மலையின் உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் இந்த ஏழு மலைகளை ஏறுவது மிகவும் சிரமம் என்று கூறப்படுகிறது.
மூலிகை மணத்துடன் வீசும் குளிர்ந்த காற்றும், ரம்மியமான சூழலும், பறவைகள் மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலியும் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுப்பதால் கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் சாமி தரிசனம் செய்யவும் இயற்கையை ரசிக்கவும் பொதுமக்கள் வருவது வழக்கம்.
அதேவேளையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து திரும்பியதும் கடந்த ஆண்டைப் போன்று மலையடிவாரத்தில் உள்ள கவுண்டர்களில் கொடுத்து ரூ. 20 திரும்பப் பெறவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்புகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை வனச்சரக அதிகாரிகள் பொருத்தியுள்ளனர்.