சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், ஏற்கனவே டெல்லி சென்று ஜேபி நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது, அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரது காரில் இருந்த திமுக கொடி அகற்றப்பட்டு, பாஜக கொடி மாட்டப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச்செயலாளராக இருந்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நிலையில், அவரது பதவியை, தனக்கு தருமாறு, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.கசெல்வம், திமுக தலைமையிடம் கேட்டதாகவும், ஆனால், அவருக்கு கேட்டு மாவட்டச்செயலாளர் பதவி மறுக்கப்பட்டால், கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் திடீரென டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமைக்கழகம் 2020ம் ஆண்டு ஆகஸ்டு 13ந்தேதி அறிவித்தது.
இதையடுத்து கட்சியில் இருந்து என்னை நீக்கியது நியாயம் இல்லை; ஜனநாயக படுகொலை என விமர்சித்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களமும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மாநிலதலைவர் , எல்.முருகன், சி.டி. ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குக செல்வம், 50 ஆண்டு திராவிட கட்சியில் இருந்தேன், இப்போது பா.ஜ.கவில் இணைந்தது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் காரில் பாஜக கொடி கட்டப்பட்டுள்ளது.