காமெடி நடிகர் கருணாஸ், “முக்குலத்தோர் புலிப்படை” என்ற கட்சி (!)யை ஆரம்பித்தபோது யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் இந்த கட்சியை துவக்கியதில் இருந்தே பிரச்சினைதான்.

ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே என்கிற காமெடி மாதிரி.. கருணஸை தவிர முகம் தெரிந்த நபர்கள் யாரும்… அட.. முகம் தெரியாத யாரும்கூட இந்த அமைப்பில் கிடையாது.  “மொத்த மெம்பர்களையும் ஒரு குட்டியானை டெம்போ வண்டியில்” ஏற்றிவிடலாம்” என்றுதான் ஆளாளுக்கு கலாய்த்தார்கள்.

பட்.. பஞ்சாயத்துக்கு குறைச்சலே இல்லை! கட்சியைத் துவங்கிய நேரத்திலேயே யார் யாருக்கு என்ன போஸ்ட் என்பதில் ஏகப்பட்ட பிரச்சனை வந்தது. அதையெல்லாம் ஒருவழியாக சமாளித்தார் “தலைவர்” கருணாஸ்.

அடுத்த சர்ச்சை 2013 செப்டம்பரில் முளைத்தது. கோவையை அடுத்த பள்ளபாளையத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் (!) பொதுக்கூட்டத்தைக் கூட்டி, பேசினார் கருணாஸ். அந்தக் கூட்டத்தில் காமராஜரை அவதூறாகப் பேசிவிட்டார் கருணாஸ் என்று சர்ச்சை வெடித்தது. நாடார் இன அமைப்புகள் பல, கருணாஸுக்கு கண்டனம் தெரிவித்தன.

கருணாஸ்

பதறிப்போன கருணாஸ், தான் எந்தவொரு தலைவர் குறித்தோ, சாதியினர் குறித்தோ அவதூறாகப் பேசவில்லை என்று அறிக்கை மேல் அறிக்கைவிட்டு பிரச்சினையை சமாளித்தார்.

அடுத்த சில மாதங்களிலேயே அடுத்த சர்ச்சை வெடித்தது. தன் கட்சியின் பெயரிலேயே “முக்குலத்தோரை” வைத்திருக்கும் கருணாஸ், முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்பதுதான் அந்த சர்ச்சை.

“கருணாஸ் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்.  அவரை எடுத்து முக்குலத்தோர் தம்பதி வளர்த்தனர். ஆகவே முக்குலத்தோர் பெயரில் அவர் கட்சி நடத்தக்கூடாது” என சிலர் பிரச்சினையை கிளப்பினர்.

திரைப்பட இயக்குநர் ஷக்தி சிதம்பரமும், “கருணாஸ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் என பொய்சொல்லி, அந்த சாதி பெயரில் கட்சி நடத்துகிறார். தைரியமிருந்தால் அவர் தன் சாதிச் சான்றிதழைக் காண்பிக்கட்டும்” என்று சவால் விட்டார்.

அடுத்ததாக, தமிழ்நாடு தேவர் பேரவை என்ற அமைப்பை நடத்திவரும் முத்தையா தேவராஜ் என்பவர், தனது அமைப்பினர் சிலருடன் (பத்து  பேருக்குள்தான் இருக்கும்) கருணாஸ் வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து ஷக்தி சிதம்பரம் மீதும், முத்தையா தேவராஜ் மீதும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் கருணாஸ். தனது பெயர் கருணாநிதி என்றும் தான் முக்குலத்தோரில் அமுடையார் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

பிறகு அந்த பிரச்சினை அப்படியே அமுங்கியது.

கொஞ்ச நாள் அமைதி.

இந்த நிலையில் கடந்தவருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத ஜாக்பாட் அடித்தது கருணாஸுக்கு. அவரை திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறித்தார் அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா. ஆம்.. முக்குலத்தோர் புலிப்படை என்று சொல்லிக்கொண்டாலும், இரட்டை இலை சின்னத்தில்தான் அங்கு போட்டியிட கருணாஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. போட்டியிட்டு வெல்லவும் செய்தார்.

அதன் பிறகும் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் குறித்து அவ்வப்பது சிறு சிறு சலசலப்புகள் கிளம்பும்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டார் கருணாஸ். அப்போது ஆர்வமிகுதியில் (!) ஒரு இளைஞர், கருணாஸோடு செல்பி எடுக்க விருப்பம் தெரிவிக்க.. கருணாஸும் சிரித்துக்கொண்டே போஸ்கொடுத்தார். அந்த ஒளிப்படம், சமூகவலைதளங்களில் வைரலானது.

முதல்வராக இருந்தவரின் இறுத்திச் சடங்கில்.. அவரால் எம். எல்.ஏ. ஆன கருணாஸ்.. இப்படி போஸ்கொடுக்கலாமா ஆளாளுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

கிட்டதட்ட இரண்டு நாட்கள் சமூகவலைதளங்களில் இந்த மேட்டர்தான் ஓடியது. “வச்சு செஞ்சாங்க” என்பதற்கு சரியான உதாரணமாக இதைச் சொல்லலாம். மறுபடி பதறியடித்துக்கொண்டு விளக்கம் கொடுத்தார் கருணாஸ்.

சிக்கலான செல்பி

பிறகு கடந்த (பிப்ரவரி) மாதம் அடுத்த விவகாரம்.

தனது சொந்தத் தொகுதியான திருவாடானைக்குச் சென்ற கருணாஸ் காரின் மீது செருப்புகள் வீசப்பட்டன.   “சசிகலா அணியைச் ஆதரித்ததால் கருணாஸ் (எம்.எல்.ஏ.) மீது செருப்பு வீசப்பட்டது” என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னை கூவத்தூர் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு “தேவையான”வற்றை அளித்து கவனிக்கும் பொறுப்பு கருணாஸுக்கு கொடுக்கப்பட்டதாகவும், கொடுக்கப்பட்ட “பணி”யை கருணாஸ் திறம்பட செய்ததாகவும் தகவல் பரவியது.

மீண்டும் கருணாஸுக்கு அர்ச்சனை பொழிய ஆரம்பித்தார்கள் நெட்டிசன்கள்.

இதற்கிடையே கருணாஸின் பிறந்தநாள் வந்தது. “ஏகப்பட்டபேரு போன் செஞ்சாங்க. ஆனா ஒருத்தர்கூட வாழ்த்தலை.. ஆளாளுக்கு திட்டறாங்க..” – இது கருணாஸ் தனது நண்பர்களிடம் சொல்லி புலம்பியது.

இந்த நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ‘முக்குலத்தோர் புலிப்படை’ கட்சியின் துணைத்தலைவர் உட்பட நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார் கருணாஸ்.

அவர்களோ, “முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் பதவியில் இருந்து கருணாஸை நீக்குகிறோம்” என்று அறிவித்துள்ளனர்.

கட்சியின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் ஆகியோர் கூட்டாக  இந்த மதுரையில் அறிவிப்பு வெளியிட்டனர்.

புதிய தலைவராக சந்தனகுமாரை நியமித்து செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

“ஹூம்.. ஒரு கட்சி.. ஒரு எம்.எல்.ஏ… ஓராயிரம் பிரச்சினைகள்” என்று புலம்புகிறார் கருணாஸ்.