‘தோட்டம்’ மலேசிய தமிழர்களின் பிரச்சினையை பேசும் திரைப்படம்

லேசியாவைச் சேர்ந்த  Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘தோட்டம்.’

இந்தப் படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணி யம் நடித்துள்ளார். நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடித்துள்ளனர். மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சதீஷ் B சரண், இசை – சாய், பாடல்கள் –  நா.முத்துக்குமார், அண்ணாமலை, மாணிக்க சண்முகம், படத் தொகுப்பு – வினோத், எழுத்து, இயக்கம் – அரங்கண்ணல் ராஜ்.

படம் பற்றி இயக்குநர் அரங்கண்ணல் ராஜ் பேசும்போது, “கடந்த 200 வருடங்களாக நடந்து வந்த ஒரு பிரச்சனையை இந்தப் படத்தில் அலசியிருக்கிறோம். ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டுதான். இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்.

அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் இன்றைக்கு பெரும் வணிக சந்தையாகி விட்டது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டும் அதே நிலையில்தான் இருக்கிறது.

அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறிவிட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை தொழிலாளர்கள் போராடி எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும்விதமாக தமிழ்ப் பையனுக்கும் சீனப் பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.

மலேசிய நடிகர், நடிகைகள், தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களை இணைத்து இந்தத் ‘தோட்டம்’ படத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் உலகமெங்கும் ‘தோட்டம்’ வெளியாகவுள்ளது…” என்றார்.


English Summary
'thottam' is a film that talks about the problem of Malaysian Tamils