சென்னை: ”மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை’ என புலம்புபவர்களிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை’ என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நக்கலடித்துள்ளார். தமிழகத்தில் சிஸ்டம்சரியில்லை என்று குரல்கொடுத்துவிட்டு, பதுங்கிக்கொண்ட ரஜினியை சீண்டும் நோக்கில், கமல் மறைமுகமாக பேசியிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காள் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும், பீகார் தேர்தல் குறித்தும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில, வாக்காளர் என்ற அடையாளம் 18 வயதை பூர்த்தி செய்த ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவம். கடமைகளை சரியாக செய்யாத சமூகம் தன் உரிமைகளை தன்னால் இழந்து விடும். ‘மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை’ என புலம்புபவர்கள் பலரிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை. எதை வேண்டாம் என நினைக்கிறோமோ அந்த விஷயத்தால் தான் நமக்கு ஆபத்து.
நவம்பர் 21, 22 ந்தேதிகள், டிசம்பர் 12, 13 ந்தேதிகளில் வீட்டருகே உள்ள ஓட்டுச்சாவடியில் நடக்க உள்ள சிறப்பு முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டை தொடர்பான அனைத்து தேவைகளையும் அங்கு பெறலாம் .
சமீபத்தில் பீஹாரில் நடந்த தேர்தலில் ஒருவர் 12 ஓட்டில் தோற்றுள்ளார். முக்கியமாக இல்லத்தரசிகளின் ஓட்டுகள் வெற்றியை தீர்மானித்துள்ளன. ஓட்டு போடுவது யாருக்கோ அல்ல; உங்களுக்காகத் தான். உங்களுக்காக யார் முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை என்று கமல்கூறிய வார்த்தை, ரஜினியை கிண்டடிப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.