டில்லி

பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என அழைப்பதில் பெருமை அடையாதவர் தங்களை இந்தியர் எனச் சொல்லக் கூடாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

 

பாஜக தலைவர்கள் தொடர்ந்து காந்தியையும் நேருவையும் தவறாகச் சித்தரித்து வருவது யாவரும் அறிந்ததே.    அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி என்னும் நிகழ்வுக்கு சில மணி நேரம் முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேரு காரணம் எனக் கூறி உள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு பிரக்யா தாகூர் உள்ளிட்ட பல பாஜகவினர் காந்தியை இகழ்ந்து கோட்சேவை  புகழ்ந்து வந்துள்ளனர்.

ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.   இதற்குப் பதிலாக மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார்.    தனது உரையில் இந்தியாவில் கடும் பிளவு இருந்ததாகவும் இந்த நாட்டின் தந்தையாக அவர் அந்தப் பிளவுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.   வழக்கமாக மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என்னும் போது  இது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஜிதேந்திர சிங்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, “பிரதமர் மோடி தாம் கலந்துக் கொண்ட ஹவ்டி மோடி நிகழ்வை அவர் டிரம்புக்கு பிரசாரம் செய்ய பயன்படுத்தி உள்ளார்.   இது மிகவும் தவறான செய்கையாகும்.   மகாத்மா காந்திக்குப் பதில் தன்னை இந்தியாவின் தந்தையாக அவர் முன்னிலைப்படுத்திக் கொண்டதும் தவறானதாகும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “அமெரிக்க அதிபர் டிரம்ப் நமது பிரதமரை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்துள்ளார்.   இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இவ்வாறு பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை எனக் கூறுவதில் பெருமை அடையாதவர்கள் தங்களை இந்தியர்கள் என சொல்லிக் கொள்ளக் கூடாது. ” எனத் தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.