சென்னை: கல்குவாரி உரிம விவகாரத்தில், சட்டத்துக்கு புறம்பாக ஏதும் நடைபெறவில்லை என்றும், திமுகவில் இருப்பவர்கள் புத்தகர், காந்தி, இயேசுவா என்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக சட்டஅமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானுர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரி உரிமத்தை, அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கியுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர்மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர், முன்னாள் மேயர், முன்னாள் துணை முதல்வர், நாளைய முதல்வர் எனப் பகல் கனவு கண்டு கொண்டிருக்கக்கூடியவர், தினந்தோறும் அறிக்கைகளை வெளியிடுகிறார். ஆனால், அவர் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாக அதில் சொல்லியிருப்பது சரியா, தவறா என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும், தனக்குத் தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களைக் கேட்டாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நக்கலடித்தார்.
எங்கள்மீது குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டாம் என நான் சொல்லவில்லை, ஆளும் அரசுமீது குற்றச்சாட்டுகளைக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு முழுக்க முழுக்க உரிமை உண்டு. ஆனால், அந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பதை அவர் தெரிந்துகொண்டு சொல்ல வேண்டும்.
பொதுஊழியர்களின் உறவினர்கள் சட்டபூர்வமாக விடப்படும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என எந்தச் சட்டத்திலும், எந்த இடத்திலும் சொல்லவில்லை. திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா? அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா?
குற்றச்சாட்டைச் சொல்வதற்கு முன்பு தன் தவறுகளைப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மகன், முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சட்டபூர்வமான பொது ஏலத்தில் கலந்துகொண்டு ரூ.28 லட்சத்தில் எடுக்கப்பட்ட குவாரியை இரண்டாண்டு காலமாக நடத்தி வருகிறார். அதில் விபத்து நடைபெற்றிருக்கிறது. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு முறையான இழப்பீட்டுத் தொகையை வழங்கும். கல்குவாரியில் வேலை செய்தவர்கள் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் நடக்கவில்லை”.
இவ்வாறு அமைச்சர் பதில் தெரிவித்தார்.